திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அங்கு சட்டவிரோதப் பண வசூல் நடைபெறுவதாகவும் தொடரப்பட்ட வழக்கில், உண்மையை ஆராய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ஏ. ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சமயபுரம் கோவிலில் முறையான கழிவறை வசதியோ, தூய்மைப் பணிகளோ மேற்கொள்ளப்படுவதில்லை. கோயிலின் கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அங்கு அதிகளவில் உள்ளது. கோயில் வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பக்தர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது உள்ளிட்டவற்றை குறிப்பிருந்தார்.
நீதிபதியின் உத்தரவுகள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரத சக்கரவர்த்தி, வழக்கின் தீவிரத்தைக் கருதிப் இந்த விவகாரத்தில் நேரில் ஆய்வு செய்ய எம். அகிலாண்டேஸ்வரி என்ற வழக்கறிஞரை ஆணையராக நியமித்தார். பக்தர்களின் பாதுகாப்பு (குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள்), உடைமைகளைப் பாதுகாக்கும் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள். கோயில் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுகிறதா என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, நீர் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கோயிலில் பக்தர்களால் பயன்படுத்தப்படும் இலைகளிலிருந்து பயோ கியாஸ் (Bio-gas) தயாரிக்க முடியுமா என்பதை ஆராய, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் (TEDA) தலைவரை இந்த வழக்கில் நீதிமன்றமே தானாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்துள்ளது.
அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல்கள்
வழக்கறிஞர் ஆணையர் கோயில் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துக்களைக் கேட்டு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது உள்ளூர் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். ஆணையரின் பயணத்திற்காக சமயபுரம் பேரூராட்சி சார்பில் வாகனம் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 4, 2026-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
'வழக்கறிஞர் ஆணையர்' (Advocate Commissioner) ஏன் நியமிக்கப்படுகிறார்?
நீதிமன்றத்தில் ஒரு தரப்பு சொல்லும் புகாரை மறுதரப்பு மறுக்கும்போது, அங்குள்ள எதார்த்த நிலையை நடுநிலையோடு கண்டறிய வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றம் அனுப்பும். அவர் அளிக்கும் அறிக்கையே (Field Report) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க மிக முக்கியமான ஆதாரமாக அமையும்.