பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவில்களில் சிறப்பு அன்னதானம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில் தலையிட முடியாது என்றும் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி
நெல்லை பகுதியை சேர்ந்த பெரியநம்பி கோபாலன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் “பேரறிஞர் அண்ணா இந்து சமயத்தின் மீதோ அல்லது கோவில்கள் மீதோ நம்பிக்கை இல்லாதவர். எனவே, அவரது நினைவு நாளன்று கோவில் பணத்தை செலவழிப்பது முறையல்ல. கோவில் பணத்தைக் கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்குவதற்கும், இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். கோவிலின் உபரி நிதியை அதன் ஆன்மீகப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அரசியல் தலைவர்களின் நினைவு நாளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை வைத்தார்.
அரசின் கொள்கை முடிவு
இந்த மனு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் கீழ், பொது நலனுக்காகவும், ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவதற்காகவும் கோவில் நிதியைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என உள்ளது. அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தில் பொது விருந்து (அன்னதானம்) நடத்துவது என்பது மாநில அரசின் ஒரு கொள்கை முடிவு (Policy Decision) ஆகும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அண்ணா நினைவு நாளில் அன்னதானம் வழங்குவதற்கு தடை விதிக்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.