மயிலாடுதுறை கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனை, சட்டத்திற்குப் புறம்பாகச் சாதாரண சிறையில் அடைத்ததற்காகத் தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2022-ம் ஆண்டு மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நகரத் தலைவர் கண்ணன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டார். சிறார் நீதிச் சட்டப்படி (Juvenile Justice Act), இந்தச் சிறுவன் மீதான விசாரணை சிறார் நீதிமன்றத்தில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்றத்தில் மற்ற பெரியவர்களுடன் சேர்த்து இந்த சிறுவன் மீதான வழக்கும் விசாரிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு பின் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க இடமில்லாத காரணத்தால், அச்சிறுவன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தாயின் சட்டப் போராட்டம்
தனது மகனைச் சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்துள்ளதாகக் கூறி, அவரது தாய் சவீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்தார்.
நீதிபதிகளின் காரசாரமான தீர்ப்பு
- நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து 18 வயது பூர்த்தியாகாத ஒருவரை, மற்ற குற்றவாளிகளுடன் இணைத்து அமர்வு நீதிமன்றத்தில் விசாரித்தது சிறார் நீதிச் சட்டப்படி முற்றிலும் தவறு. எனவே, அந்தச் சிறுவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்தனர்.
- தண்டனைக்குப் பிறகு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்காமல், சாதாரண சிறையில் அடைத்தது சட்டப்படி தவறு. கடந்த 2023 ஜூன் முதல் கடலூர் சிறையில் அச்சிறுவன் அடைக்கப்பட்டது சட்டவிரோதக் காவல் ஆகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
- சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டதற்காக அந்த இளஞ்சிறாருக்குத் தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கை மயிலாடுதுறை சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், ஆறு மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
நிபந்தனை ஜாமீன்
நீண்ட காலம் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு, அந்த இளஞ்சிறாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கியத்துவம்
குற்றம் சுமத்தப்பட்டவர் ஒரு சிறுவனாக இருக்கும்போது, அவருக்குச் சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புகளை உறுதி செய்யத் தவறிய அதிகாரிகளுக்கும், கீழ் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.