ஈரானில் இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக தவித்து வரும் சுமார் 700 தமிழக மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வரக் கோரிய வழக்கில், மத்திய அரசு விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்த முகேஷ் (26) மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 25 மீனவர்கள் ஈரானின் Bandar-e-Jazeereh துறைமுகத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் தவிர ஈரானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 700 தமிழக மீனவர்கள் தவித்து வருவதாகத் தெரியவருகிறது.
ஈரானில் நடக்கும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளால் மீனவர்களின் உயிருக்கு தீவிர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி அவர்கள் ஒரு ‘சிறைவைப்பு’ போன்ற சூழலில் உள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.
மனுதாரரின் முக்கியக் கோரிக்கை
“போர் பதற்றம் காரணமாக மீனவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கடலோரப் பகுதிகள் பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவிட்டன. எனவே, அவர்கள் அனைவரும் இந்தியா திரும்புவதற்குத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதிகளின் உத்தரவு
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, ஈரானில் உள்ள மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தும், அவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 22, 2026-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.