ராமநாதபுரம் மாவட்டம் கரங்காடு பகுதியில் உள்ள முக்கிய நீர்நிலையான ‘மரைக்காயர் கண்மாயை’ ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் புதிய கோவில் கட்டுமானங்களை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கரங்காடு பகுதியைச் சேர்ந்த செங்கோல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கரங்காடு கிராமத்தின் முக்கிய குடிநீர் மற்றும் நீர்நிலை ஆதாரமாக ‘மரைக்காயர் கண்மாய்’ உள்ளது. சில தனிநபர்கள் இந்தக் கண்மாயில் கழிவுகளைக் கொட்டி, நீர்நிலையை மேடாக்கி சட்டவிரோதமாகப் பிரம்மாண்டமான முறையில் விநாயகர் கோவில் கட்டி வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) படி, அந்தப் பகுதி நீர்நிலை என்பதும், அங்கு கட்டுமானங்களுக்கு எவ்வித அரசு அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அருகே கல்வி நிறுவனம் இருப்பதால், கோவில் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்திருந்தார்
நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதம்
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் கிளிண்டன் ஆஜராகி, அந்தப் பகுதி அரசு ஆவணங்களின்படி நீர்நிலை என்பதையும், அங்கு கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட கட்டுமானங்களின் புகைப்படங்களையும் ஆதாரங்களாகத் தாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞர் ஆஜராகி, அந்தப் பகுதியில் ஏற்கனவே மிகச்சிறிய அளவில் ஒரு கோவில் இருந்து வந்தது என்பதற்கான பழைய புகைப்படங்களைச் சமர்ப்பித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்:
- வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியை உடனடியாக முறையாக அளவீடு செய்ய வேண்டும்.
- கண்மாய் கரையில் நீண்டகாலமாக இருந்து வரும் மிகச்சிறிய கோவில் பகுதியைத் தவிர்த்து, புதிதாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின், மரைக்காயர் கண்மாயைத் தூர்வாரி பழைய நிலைக்கு மறுசீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.
முக்கியத்துவம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றாலும், அது பொது நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமையக்கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பழங்கால அடையாளங்களைப் பாதுகாப்பதோடு, நீர்நிலைகளின் பரப்பளவு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.