பாமகவின் ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் தேர்தல் களத்தில் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் மாம்பழம் சின்னத்தைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நடந்த அனல் பறக்கும் வாதங்கள்
கட்சியின் நிர்வாகக் குழு கூடி முறைப்படி ராமதாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எந்தப் பொதுக்குழுவும் நடத்தாமல் அன்புமணி தரப்பு செயல்படுகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் சின்னம் தொடர்பாக அளித்த மனு பரிசீலிக்கப்படாததால் தான் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளோம் என ராமதாஸ் தரப்பு வாதிட்டனர்.
ராமதாஸ் எந்தப் பொதுக்குழுவையும் நடத்தாமல் தன்னைத் தானே தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார். நான் எனது தந்தைக்கு எதிராகச் செயல்படவில்லை. ஏற்கனவே ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு ‘சிலிண்டர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்போது சின்னத்தை முடக்கக் கோருவது உள்நோக்கம் கொண்டது என அன்புமணி & வடிவேல் ராவணன் தரப்பு பதிலளித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில் சின்னத்தை முடக்கக் கோரும் வழக்கு சட்டப்படி செல்லத்தக்கதல்ல என நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதியின் தீர்ப்பு
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இதில் தலையிட முடியாது. பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி ராமதாஸ் தரப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அரசியல் பின்னணி
இந்தத் தீர்ப்பின் மூலம் பாமகவின் அதிகாரப்பூர்வச் சின்னமாக ‘மாம்பழம்’ சின்னத்தை அன்புமணி ராமதாஸ் தலைமையிலான வேட்பாளர்கள் பயன்படுத்துவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. அதே சமயம், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.