மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான வழக்கில், தனது சகோதரரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டும் தொனியில் பேசிய மனுதாரரின் தந்தை மீது தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் ஆவேசம் அடைந்துள்ளார். இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும், சம்பந்தப்பட்டவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
என்ன நடந்தது?
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தொடர்பான மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை வழக்கு நேற்று (மார்ச் 25, 2026) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “யாரோ ஒருவர் எனது சகோதரரைத் தொலைபேசியில் அழைத்து, தலைமை நீதிபதி எப்படி இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தார் எனக் கேட்டுள்ளார். அவர் எனக்கு நிபந்தனை விதிக்கப் போகிறாரா? இது என்ன மாதிரியான நடத்தை?” என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.
மனுதாரரின் தந்தைதான் நீதிபதியின் குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரியவந்துள்ளது.
வழக்கின் பின்னணி
இந்த வழக்கின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள். ஹரியானாவைச் சேர்ந்த ஜாட் புனியா சமூக மாணவர்கள் சிலர், திடீரெனப் புத்த மதத்திற்கு மாறினர். இதன் மூலம் மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டின் கீழ் சீட் பெற முயன்றனர்.
வெறும் இடஒதுக்கீட்டிற்காக மட்டுமே மதம் மாறியதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் இது ஒரு “புதிய வகை மோசடி” என்று குறிப்பிட்டிருந்தது. இது குறித்து ஹரியானா தலைமைச் செயலாளர் விளக்கமளிக்கவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதியின் கடும் எச்சரிக்கை
“மனுதாரரின் தந்தை மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றாலும், இத்தகைய நபர்களை எப்படிக் கையாள்வது என்பது எனக்குத் தெரியும்” என்று சாடினார்.
“கடந்த 23 ஆண்டுகளாக இது போன்ற பல நபர்களை நான் சந்தித்து வருகிறேன். என்னை ஒருபோதும் மிரட்ட நினைக்காதீர்கள்” என்று ஆவேசமாகக் கூறினார்.
மனுதாரரின் இத்தகைய அநாகரிகச் செயலால், வழக்கறிஞரை இந்த வழக்கிலிருந்து விலகிவிடுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
நீதிபதிகள் மீதான அழுத்தம் - விளக்கம்!
ஒரு வழக்கின் தீர்ப்பு அல்லது உத்தரவு பிடிக்கவில்லை என்றால், அதனைச் சட்டப்படி மேல்முறையீடு செய்ய வேண்டுமே தவிர, நீதிபதியையோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களையோ தொடர்பு கொள்வது மிகப்பரிய குற்றமாகும். இது 'குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு' (Criminal Contempt) சட்டத்தின் கீழ் வரும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை நிச்சயம். நீதிபதிகள் எவ்வித அச்சமுமின்றித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய கடுமையான சட்டங்கள் உள்ளன.