தேனி மாவட்டம் பெரியாறு பாசனக் கால்வாய் மற்றும் ஆற்றுப்படுகை பகுதிகளில் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், அங்குள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் இணைப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கருக்கட்டான்குளம் நஞ்சை பட்டாதாரர்கள் விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் விஜயராஜன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரியாறு பாசனத்தின் கீழ் உள்ள கருக்கட்டான்குளம் கண்மாய் முறையாகப் பராமரிக்கப்படாததால் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. பெரியாறு பாசனக் கால்வாய் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலத்தடி நீரைச் சட்டவிரோதமாக எடுத்து, குழாய்கள் மூலம் ஆயக்கட்டு அல்லாத நிலங்களுக்குக் கொண்டு சென்று வணிக ரீதியாக விற்பனை செய்கின்றனர். இதனால் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
நீதிமன்ற விசாரணை மற்றும் வாதங்கள்
இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் “சிலர் ஆற்றுப்படுகை ஓரங்களில் நிலங்களை வாங்கி, அங்கு ராட்சத ஆழ்துளை கிணறுகளை அமைத்து வணிக நோக்கத்திற்காகத் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். மின் இணைப்பு பெற்ற பிறகு, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது ஒட்டுமொத்தப் பாசனத்தையும் பாதிக்கிறது என வாதிட்டார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மீறப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பெரியாறு பாசன ஆறு மற்றும் கால்வாய்க்கு மிக அருகில் சமீபகாலமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் (Borewells) எண்ணிக்கையைத் தேனி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கண்டறிய வேண்டும். அந்த ஆழ்துளை கிணறுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விவரங்களைத் திரட்ட வேண்டும். மேற்கண்ட அனைத்து விவரங்களையும் விரிவான அறிக்கையாகத் தயார் செய்து ஜூன் 1-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
முக்கியத்துவம்: பாசன ஆதாரமாக விளங்கும் ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்க இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. சட்டவிரோதத் தண்ணீர் வணிகத்தைத் தடுப்பதன் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.